|
10 |
டமரர் தருக்கோட்டம்
வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந |
|
அமரர்
தருக் கோட்டம் - தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயில், வெள்யானைக் கோட்டம்
- ஐராவதம் நிற்குங் கோயில், புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் - அழகினையுடைய பலதேவர்
கோயில், பகல் வாயில் உச்சிக்கிழான் கோட்டம் - கீழ்த்திசையிற் றோற்றுகின்ற
சூரியன் கோயில், ஊர்க் கோட்டம் - இறைவன் ஊராகிய கைலாயம் நிற்குங் கோயில்,
வேற்கோட்டம் - முருகவேள் கோயில், வச்சிரக்கோட்டம் - வச்சிரப் படை நிற்குங்
கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம் - சாதவாகனன் மேவிய கோயில், நிக்கந்தன்
கோட்டம் - அருகன் கோயில், நிலாக்கோட்டம் - சந்திரன் கோயில், புக்கு எங்கும்
- இக் கூறிய கோயில்கள் எங்கும் புக்கு ;
புகர் - அழகு. நாகர் - தேவர். பகல்
வாயில் - பகற்றோற்றுகிறவாயில்; கீழ்த்திசை. உச்சிக்கிழான் - பகற்பொழுதிற் குரியோன்.
இனி, பகற்பொழுதிற்கு வழியான சூரியன் என்றுமாம். வேல் - ஆகுபெயர் ; வேற்படை நிற்குங்
கோயில் என்றுமாம். புறம்பு அணைந்த விடம் புறம்பணையாயிற்று என்பர். சாதவாகனன் -
ஐயனார். கோட்டம் யாவும் செவ்வெண். |
|