|
20
|
கேசும் படியோ ரிளங்கொடியாய்
ஆசிலாய்
செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார்
பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற்
படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங்
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி
மடியகத் திட்டாள் மகவை இடியுண்ட |
|
ஏசும்படி
ஓர் இளங் கொடியாய் - பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண் வடிவாய்த் தோன்றிப்
பாடு கிடந்தாளை நோக்கி, ஆசு இலாய் - குற்றமற்றவளே, செய்தவம் இல்லோர்க்குத் தேவர்
வரம் கொடார் - செய்யப்பட்ட தவமுடைய ரல்லார்க்குத் தேவர் வரங்கொடார், பொய்
உரை அன்று பொருள் உரையே - இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச் சொல்லி, கையிற்
படுபிணம் தா என்று - கையிலுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று,
பறித்து அவள் கைக்கொண்டு - அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்து -
சக்கரவாளக் கோட்டத்தில், தூங்கு இருளிற் சென்று - செறிந்த இருளிற் போய், ஆங்கு
இடுபிணம் தின்னும் - அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும், இடா கினிப் பேய் -
இடாகினிப் பேயானவள், வாங்கி மடியகத்து இட்டாள் மகவை - அக் குழவியை வாங்கி வயிற்றிலே
இட்டாள் ;
படி - வடிவு. இளங்கொடி - பெண். ஏசும்படி
- இகழும்படி என்றுமாம். பொருள் - மெய்ம்மை. சுடுகாட்டுக் கோட்டம் - சக்கர வாளக்
கோட்டம் ; இதன் வரலாறு மணிமேகலையிற் சக்கரவாளக் கோட்ட முரைத்த காதையாலறியப்படும்.
தூங்கு இருள் - யாவரும் துயிலுமிருளுமாம். மடி வயிறு என்னும் பொருட்டாதலை, 1
"படியை மடியகத்திட்டான்" என்பதனானும் அறிக. மடியகத்திட்டாள் - விழுங்கினாள் என்றபடி.
கோட்டத்து இருளிற் சென்று தின்னும் பேய் இளங்கொடியாய்த் தோன்றி, வரங்கொடார்
பொருளுரையே எனச் சொல்லி, தாவென்று பறித்து வாங்கி அம் மகவை மடியகத்திட்டாள் என்க.
பேய் இளங்கொடியாய் இருளிற் சென்று என்றுரைத்தலுமாம். பறித்தாள் கைக்கொண்டு என்பதும்
பாடம். |
1.
நான்மணி. கடவுள் வாழ்த்து.
|
|