9. கனாத்திறமுரைத்த காதை



25
மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன்
அஞ்ஞைநீ யேங்கி யழலென்று முன்னை
உயிர்க்குழவி காணாயென் றக்குழவி யாயோர்
குயிற்பொதும்பர் நீழற் குறுக அயிர்ப்பின்றி
மாயக் குழவி யெடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் தூய


23
உரை
28

       இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு - அப்பொழுது இடிக்குரல் கேட்ட மயில் அகவுமாறுபோல ஏங்கி யழுகின்றவளை நோக்கி, அச் சாத்தன் - அந்தச் சாத்தன் என்னுந் தெய்வம், அஞ்ஞை - அன்னாய், நீ ஏங்கி அழல் என்று - நீ ஏங்கி அழாதொழி யென்று கூறி, முன்னை உயிர்க் குழவி காணாய் என்று அக் குழவியாய் ஓர் குயிற் பொதும்பர் நீழல் குறுக - நீ செல்லும்வழி முன்னர்க் குயில்களையுடைய ஓர் மரச்செறிவின் நீழலில் உயிருடன் கிடக்கும் குழவியைக் காண்பாயென்று தான் அக் குழவியாய் அவ்விடத்துச் சென்று கிடப்ப, அயிர்ப்பு இன்றி மாயக் குழவி எடுத்து மடித் திரைத்து - ஐயமின்றி அவ் வஞ்சக் குழவியைத் தன் குழவியென்றெடுத்து வயிற்றிலணைத்துக் கொடு போய், தாய் கைக்கொடுத்தாள் அத் தையலாள் - அவள் தாயின் கையிற் கொடுத்தாள் ;

       அஞ்ஞை - அன்னை ; அண்மைவிளி. அழல் - அழாதே. முன்னை - வழி முன்னர் ; பழைய குழவியென்றுமாம். அச் சாத்தன் அக் குழவியாய்க் குறுக அத் தையலாள் எடுத்துக் கொடுத்தாள் என்க.