|
40
|
காவதங் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி யாங்கண்
இறுங்கொடி நுசுப்போ டினைந்தடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல வுயிர்த்து
முதிராக் கிளவியின் முள்ளெயி றிலங்க
மதுரை மூதூர் யாதென வினவ
|
|
காவதம்
கடந்து கவுந்திப் பள்ளிப் பூமரப் பொதும் பர்ப் பொருந்தி ஆங்கண் - காதமெனப்படும்
எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதோர் பொலிவினையுடைய
மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுது, இறுங்கொடி நுசுப்போடு இனைந்து அடிவருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து - நறிய பலவான கூந்தலையுடைய கண்ணகி இற்றுவிடும்
எனத்தக்க கொடிபோன்ற இடையும் அடியும் மிகவருந்தி இளைப்பானே பலவாகக் குறுக மூச்செறிந்து,
முதிராக் கிளவியின் முள் எயிறு இலங்க மதுரை மூதூர் யாதென வினவ - முற்றாத மழலைச் சொற்களானே
கூரிய பற்கள் விளங்க மதுரை என்னும் பழைய வூர் எதுவோ தான் என்று கோவலனைக் கேட்ப
;
பொருந்தி என்பதனைப் பொருந்த எனத்
திரிக்க. நின்றாங்கே பொருள் கூறலுமாம். காவதம் - காதம் ; பகுதிப்பொருள் விகுதி,
கண்ணகி வெயினிறம் பொறா மெல்லியலாகலின் தான் சிறிது நெறியே சென்றிருப்பினும் பெரிது
சென்றனளாக எண்ணுதலின் மதுரை மூதூர் யாதென வினவினளென்க. இராமனுடன் வனத் திற்கேக லுற்ற
சீதை அயோத்தியின் மதில் வாயிலைக் கடக்குமுன் காடு எவ்விடத்தது என்று வினாவினாளாகக்
கம்பர் கூறிய,
1"நீண்டமுடி
வேந்தனரு ளெய்திநிறை செல்வம்
பூண்டதனை நீங்கிநெறி போதலுறு நாளின்
ஆண்டநக ராரையொடு வாயிலக லாமுன்
யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய்"
என்னுஞ் செய்யுள் இதனோடு ஒத்து நோக்கி இன்புறற்பாலது.
|
1.
கம்ப. சுந்தர.
|
|