10. நாடுகாண் காதை



உருவுங் குலனு முயர்பே ரொழுக்கமும்
பெருமகன் றிருமொழி பிறழா நோன்பும்
உடையீ ரென்னோ வுறுக ணாளரிற்
கடைகழிந் திங்ஙனங் கருதிய வாறென



46
உரை
49

       உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும் - அழகும் உயர் குடிப் பிறப்பும் உயர்விற்குக் காரணமாய பெருமை பொருந்திய ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர் - அருக தேவனின் ஆகமக் கூற்றினின்றும் தப்பாத விரதமும் ஆகிய இவற்றை உடைய நீங்கள், என்னோ உறுகணாளரிற் கடைகழிந்து இங்ஙனம் கருதியவாறு என - தீவினையாளரைப் போல நும்மிடத்தை விட்டு நீங்கி இவ்வாறு வருதற்குக் கருதிய தென்னோ எனக் கேட்ப ;

       உறுகணாளர் - மிடியாளர் எனலுமாம். கடைகழிதல் இவர்க்கு முறையன்றாகலான் கடைகழிந்தென்றார். உம்மைகள் சிறப்பும்மை. உடையீர் இங்ஙனங் கருதியவாறு என்னோ என்க.க.