10. நாடுகாண் காதை

5

ஏழகத் தகரும் எகினக் கவரியும்
தூமயி ரன்னமும் துணையெனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீணெடு வாயில் நெடுங்கடை கழிந்தாங்கு



5
உரை
8

       ஏழகத் தகரும் - ஆட்டுக் கிடாயும், எகினக் கவரியும் - கவரியாகிய மானும், தூ மயிர் அன்னமும் - தூய சிறகினையுடைய அன்னமும் ஆகிய இவை, துணை எனத் திரியும் - தம்முள் இனமல்லவாயினும் இனம்போல ஒருங்கு கூடித் திரியும், தாழொடு குயின்ற தகைசால் சிறப்பின் - தாழொடு பண்ணப் பெற்ற பெருமை பொருந்திய சிறப்பினையுடைய, நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து - மிகப் பெரிய கதவினையுடைய நெடிய இடைகழியைக் கடந்து, ஆங்கு - அப்பொழுதே ;

       ஏழகத் தகர், எகினக் கவரி யென்பன இருபெயரொட்டுப் பண்புத் தொகை. எகினம் - ஈண்டு மான். 1 "நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை, குறுங்கா லன்னமொ டுகளு முன்கடை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும். குயின்ற வாயில் என்க. ஈண்டு வாயில் என்றது கதவினை ; ஆகுபெயர். தாழொடு குயின்ற என்றது போர்க்கதவாகலின் பின்பு நெகிழாவண்ணம், பண்ணுகின்றபோதே உடன்பண்ணிய என்றபடி.

1. நெடுநல். 91-2.