10. நாடுகாண் காதை






85

கலங்கலு முண்டிக் காரிகை யாங்கண்
கரும்பிற் றொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவஞ ரெய்திக்

குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும்



81
உரை
85

        ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து - கரும்பின்கண் வைத்த மிகுந்த தேன்கூ டழியப்பெற் றொழுகி, சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் - வண்டுகள் சூழ்ந்த வாவிகளின் தூய நீரொடு கலந்துவிடும் ; அடங்கா வேட்கையின் - தணியாத நீர் வேட்கையானே, அறிவு அஞர் எய்தி - அறிவு சோர்ந்து, குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் - அத்தகைய நீரை இவள் தன் அகங்கையான் முகந்து உட் கொள்ளவுந் தகும் ;

        குடங்கையாவது ஐந்து விரலுங் கூட்டி உட்குழிப்பது. இதனால் நமது அற நூலிற் கடியப் பெற்ற தேனுண்டலை ஒழிக வென்ற வாறாயிற்று. நொண்டு - முகந்து என்னுஞ் சொல் மொண்டெனத் திரிந்து, பின் நொண்டு என்றாயிற்று ; இக் காலத்தில் இஃது இழி சினர் வழக்கிலுள்ளது.