10. நாடுகாண் காதை

90

எறிநீ ரடைகரை இயக்கந் தன்னிற்
பொறிமா ணலவனு நந்தும் போற்றாது
ஊழடி யொதுக்கத் துறுநோய் காணில்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா



90
உரை
93

        எறிநீர் அடை கரை இயக்கந்தன்னில் - எறியும் நீரையுடைய வாய்க்காலின் கரையாகிய வழிக்கண், பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது - புள்ளிகளின் அழகினையுடைய நண்டினையும் நந்தினையும் பாதுகாவாது, ஊழ் அடி ஒதுக்கத்து - முறையான் அடியிட்டுச் செல்லும் செலவினால், உறுநோய் காணின் - அவற்றுக்கு மிக்க நோயுண்டாயின், தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா - நமக்கு வரும் துன்பம் நம்மால் பொறுக்கவும் முடியாது ;

        இயக்கம் - இயங்குதலையுடையது ; வழி. நந்து - நத்தை. கொலையென்று வாக்காற் கூறவுமாகாமையின் நோய் என்றார். துன்பம் - கொலைப் பாவம். இம்மைக்கண் அன்றி மறுமையில் நர கத்திலுறுந் துன்பமும் தாங்கவொண்ணா எனப் பொருள் தருதலின் தாங்கவும் என்னுமும்மை எச்சவும்மை, அருக சமயத்தாரின் கள்ளுண்ணாமை, கொல்லாமை யென்னும் அறங்கள் மறந்தும் வழுவ லாகாவென்பதனை இங்ஙனம் அழகுறக் கூறிப் போந்தனர்.