10. நாடுகாண் காதை



95

வயலுஞ் சோலையு மல்ல தியாங்கணும்

அயல்படக் கிடந்த நெறியாங் கில்லை
நெறியிருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறியறிந் தவையவை குறுகா தோம்பெனத்



94
உரை
97

        வயலும் சோலையும் அல்லது யாங்கணும் - எவ்விடத்தும் வயல்களுஞ் சோலைகளுமல்லாது, அயல்படக் கிடந்த நெறி ஆங்கில்லை - வேறுபடக் கிடந்தவழி அவ்விடத்திலில்லை ஆகலான், நெறி இருங் குஞ்சி நீ வெய்யோளொடு - நெளிந்த கரிய குஞ்சியினையுடையாய் நீ நின்னை விரும்பிய இவளுடன், குறி அறிந்து அவையவை குறுகாது ஓம்பு என - அவ்வவ்விடங்களைக் குறிப்பானே யுணர்ந்து அவற்றைச் சாராது பாதுகாப்பா யாகவென்று சொல்லி ;

        முன்னர், முதற்கண் சோலையையும் பின்னர் வயலையும் கூறி வைத்து, ஈண்டு வயலுஞ் சோலையுமல்லது என்றது எதிர் நிரனிறை. இத்துணையும் கவுந்தியடிகள் கூற்றில் வைத்துக் கண்ணகியின் மென்மைத் தன்மை கூறுவாராய்ச் சோணாட்டின் வளமிகுதியை எழில்பெற உடன் கூறினார் என்க.