10. நாடுகாண் காதை





105





110

கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பிற் கடுங்குர லேற்றொடுஞ்

சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓவிறந் தொலிக்கு மொலியேயல்லது

ஆம்பியுங் கிழாரும் வீங்கிசை யேத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவு மொலித்தல் செல்லாக



102
உரை
111

        கரியவன் புகையினும் - சனி புகைந்தாலும், புகைக் கொடி தோன்றினும் - தூமகேது தோன்றினாலும், விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும் - விரிந்த கதிரினையுடைய சுக்கிரன் தென்றிசைக்கண் செல்லினும், கால்பொரு நிவப்பின் - காற்று மோதும் குடகின் உச்சியின்கண், கடுங்குரல் ஏற்றொடு சூல் முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்ப - கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய கார் பெயலாகிய வளத்தைச் சுரத்தலான், குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது - அக்குட வரைக்கண் தோன்றிய கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தி யிடிக்கும் கடுகி வருதலையுடைய காவிரியின் புதுநீர் வாய்த்தலைக்கண் கதவின் மீதெழுந்து விழும் ஒலியல்லாது, ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும் ஓங்கு நீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லா - பன்றிப்பத்தரும் பூட்டைப்பொறியும் ஒலி மிகுந்த ஏற்றமும் நீர்மிகும் இறைகூடையுமென இவை ஒலித்தல் இல்லாத ;

        தாரமொடு வளனெதிர நெரிக்குங் கடுவரற் காவிரிப் புது நீர் என்க. புகைதல் - பகைவீடுகளிற் சென்று மாறுபடுதல். புகைக் கொடி - தூமகேது ; வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் கரந்துறை கோட்கள் நான்கினுள் தூமம் எனப்படுவது. 1 "மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளியோடினும்" என்றார் பிறரும். இன்னோரன்ன குறிப்புக்களினின்று பண்டைத் தமிழ் மக்கள் கோட்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற் புலமை யுடையரா யிருந்தனரென்பது பெறப்படும். கோட்களின் முரணிய நிலையில் உலகின் பிற பகுதிகளில் மழையில்லையாயினும் குடகமலையில் மழை பெய்வதும், காவிரியில் நீர்பெருக்கெடுத்து வருவதும் தப்பாவெனக் காவிரியின் சிறப்புக் கூறியவாறாயிற்று. ஒலித்தல் செல்லாவென்றது பிற நாடுகளிலாயின் இவ் வொலியே மிகும் என அவற்றின் சிறுமை தோன்ற நின்றது. ஓ - வாய்த்தலைக்கிட்ட கதவு ; இனி ஓவிறந்து - ஒழிவின்றி யென்றுமாம். உம்மைகள் சிறப்பும்மை.

1. புறம். 116.