10. நாடுகாண் காதை





130

கடிமலர் களைந்து முடிநா றழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமுந் தோய்ந்து
சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்

செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர்
வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணியும்



127
உரை
131

        கடிமலர் களைந்து - மணமுள்ள மலர்களையுடைய ஆம்பல் முதலியவற்றைப் பறித்தெறிந்து, முடிநாறு அழுத்தி - அங்ஙனம் பறித்தவிடத்தே முடியின் நாற்றைப் பகிர்ந்து நட்டு, தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து - வளைந்த வளையலணிந்த தோளின்கண்ணும் மார்பின்கண்ணும் படிந்து, சேறாடு கோலமொடு வீறு பெறத் தோன்றி - சேறாடுகின்ற கோலத்தோடு அழகு பெறத் தோன்றி, செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர் - சிவந்த கெண்டையை ஒத்த நெடிய கண்களையும், சிலவாகிய மொழியினையுமுடைய கடைசியரது, வெங் கள் தொலைச்சிய விருந்திற் பாணியும் - மிகுந்த மயக்கந்தருங் கள்ளை உண்டு தொலைத்ததனா லுண்டான இசையொடு பழகிப்போதாத பாடலும் ;

        கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தி என்பதற்குக் காலையின் முடித்த பூக் களைந்து முடித்த முடியிலே முடியினாற்றை நறுக்கிச் சூடிக்கொண்டு எனவும், தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடல் என்பதற்கு ஒருவர்மே லொருவர் சேற்றை இறைத்துக் கோடல் எனவும் கூறுவார் அடியார்க்குநல்லார். சின்மொழி - இழிந்த மொழி எனவுமாம்.