|
|
பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும்
இந்திர விகார மேழுடன் போகிப்
|
|
பணை
ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி - உயர்ந்த ஐந்து பரிய கிளையினையும் பசிய இலையினையுமுடைய
மாபோதியின், அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி - எழில் விளங்கும் நிழலி லெழுந்தருளிய
புத்த தேவன் அருளிச் செய்த ஆகமத்தை, அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் - விசும்பியங்குவோராகிய
சாரணர் மறைய இருந்து ஓதி யாவர்க்கும் பொருள் விளங்கக் கூறப்படும், இந்திர விகாரம்
ஏழ் உடன் போகி - இந்திரன் ஆக்கிய விகாரங்களேழினையும் முறையே கண்டு அவற்றைக் கழிந்து
போய் ;
போதி - போதத்தையுடையது ; அரசு. போதம்
- ஞானம். அரசு என்னும் பெயரும் அதன் தலைமையை யுணர்த்தும். புத்தன் அரச மரத்தடியில்
ஞானம் பெற்றதும், யான் தருக்களில் அரசாகின்றேன் எனக் கண்ணன் பகவற்கீதையிற் கூறியதும்,
பிறவும் இதன் பெருமைக்குச் சான்றாம். திருமொழி - ஆகமம் ; ஆகுபெயர். அறைந்தனர் சாற்றுதல்
- மூலங் கூறிப் பொருளுரைத்தல். அறைந்தனர் - முற்றெச்சம். விகாரம் - நினைவினானாக்குதல். |
|