10. நாடுகாண் காதை






160


ஆற்றுவீ யரங்கத்து வீற்றுவீற் றாகிக்
குரங்கமை யுடுத்த மரம்பயி லடுக்கத்து
வானவ ருறையும் பூநா றொருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்

பெரும்பெய ரைய ரொருங்குட னிட்ட
இலங்கொளிச் சிலாதல மேலிருந் தருளிப்
பெருமக னதிசயம் பிறழா வாய்மைத்
தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்



156
உரை
163

        ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகி - ஆற்றை மறைக்கும் அரங்கத்தின்கண் வேறிடத்தில்லாத தன்மைத்தாய், குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து - வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப் பெற்ற வேலியையுடைய மரங்கள் நெருங்கிய சோலைக்கண்,வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-விண்ணவர் உறைதற்கொத்த மலர்கள் மிக்குத் தோன்றும் ஒரு பக்கத்தே, பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா - பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி, பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட - பெரும் புகழினையுடைய உலக நோன்பிகள் ஒருங்கு கூடி அப்பட்டினப்பாக்கத்தி லிட்ட, இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி - விளங்கும் ஒளியினையுடைய சிலாவட்டத்தின்கண் எழுந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை தருமம் சாற்றும் சாரணர் தோன்ற - அருகதேவனாற் செய்யப்பட்ட அதிசயங்கள் மூன்றுந் தப்பாத உண்மையினையுடைய அறவொழுக்கங்களை அருளிச்செய்யும் சாரணர் வந்து தோன்ற ;

       வீ - மறைவு. அரங்கம் - ஆற்றிடைக்குறை ; ஈண்டுச் சீரங்கம். குரங்கு - வளைவு. பட்டினப்பாக்கத்திலிட்ட சிலாதலமேலிருந்து தருமஞ் சாற்றுஞ் சாரணர் அப் பட்டினப்பாக்கம் விட்டு நீங்கிப் பூநாறொரு சிறைத் தோன்ற வென்க. பூநாறு என்பதற்கு மலர்கள் மணங் கமழும் எனலுமாம். அதிசயங்கள் மூன்றாவன : சகசாதிசயம், கர்மக்ஷயாதிசயம், தெய்வீகாதிசயம் என்பன.