10. நாடுகாண் காதை




165




தருமஞ் சாற்றுஞ் சாரணர் தோன்றப்
பண்டைத் தொல்வினை பாறுக வென்றே

கண்டறி கவுந்தியொடு காலுற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கிற் றெரிந்தோ னாயினும்
ஆர்வமுஞ் செற்றமு மகல நீக்கிய
வீர னாகலின் விழுமம் கொள்ளான்



164
உரை
169

       பண்டைத் தொல்வினை பாறுக என்றே - முன் செய்த பழவினைகள் யாவும் கெட்டொழிக என்றுட்கொண்டு, கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் - அச் சாரணர் வந்தமையைக் கண்டுணர்ந்த கவுந்தியடிகளுடன் அவர்கள் திரு வடியிற் பொருந்த வீழ்ந்து வணங்கியோர், வந்த காரணம் - ஈண்டு வந்ததன் காரணத்தை, வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும் - விளங்கிய கோட்பாட்டினையுடைய தன் உள்ளமெனும் விளக்கினான் அறிந்தோனாயினும், ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய - விருப்பினையும் வெறுப்பினையும் தன்னை விட்டு அகலும்படி போக்கிய, வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் - வீரனாகலாலே இவர்க்கு வருந் துன்பத்திற்கு வருத்தங் கொள்ளானாகி ;

       தொல்வினை யென்றார் ; முன்னர்த் தோற்றத்துப் பல்வகைப் பிறவியினும் தொடர்ந்து வருதல் கருதி. கண்டறி கவுந்தி யென்றமையாலும் அவருக்குக் காலவுணர்ச்சியின்மை அறிக. ஒடு - ஒரு வினையொடு. வீழ்ந்தோர் - வினைப்பெயர். சிந்தை விளக்கு - அவதி ஞானம் ; என்றது முக்காலமு முணரும் உணர்வினை. செற்றம் - வெகுளி ; ஈண்டு வெறுப்பின்மேற்று. வந்த சாரணருள் உபதேசிப்போர் மூத்தோரே யாகலின், வீரனென ஒருமையாற் கூறினார்.