10. நாடுகாண் காதை


175

கடுங்கால் நெடுவெளி யிடுஞ்சுட ரென்ன
ஒருங்குட னில்லா வுடம்பிடை யுயிர்கள



174
உரை
175

        கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன - கடிய காற்றையுடைய நெடிய வெளியிடத் திடப்பெற்ற விளக்கென்னும்படி அழியினல்லது, ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் - உடலிடை நின்ற வுயிர்கள் அவ் வுடம்பொடு கூடி உடனில்லா ;

        தீவினைப் பயனாய துன்பமும், யாக்கை நிலையாமையும் இவர் பால் உறுவது கண்டு சாரணர் கவுந்தியடிகட்கு இங்ஙனங் கூறினார் என்க. விளக்கினை உவமித்தார் : சுடரொழிதற் குரிய வளி நேர்ந்த வழி அச் சுடர் ஒழிதல்போல உலத்தற்குரிய வினை நேர்ந்தவழி உயிரொழிதலும், சுடரொழிந்தவழி அச் சுடர் யாண்டுச் சென்றுற்றதென அறிதற்கியலாவாறு போல உயிரொழிந்த வழி அவ் வுயிர் யாண்டுச் சென்றுற்றதென அறிய முடியாமையுமாய இவ் வொப்புமை கருதி என்க. அழிதல் ஒருதலை யென்பது புலப்படக் கடுங்கால் எனவும் நெடுவெளி யெனவும் அடை கொடுத்தார்.