10. நாடுகாண் காதை

15





20





25

புலவூண் டுறந்து பொய்யா விரதத்
தவல நீத்தறிந் தடங்கிய கொள்கை
மெய்வகை யுணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி யைந்துந் தம்முடன் கூடி

வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல்
நீரணி விழவினு நெடுந்தேர் விழவினுஞ்
சாரணர் வரூஉந் தகுதியுண் டாமென
உலக நோன்பிக ளொருங்குட னிட்ட

இலகொளிச் சிலாதலந் தொழுது வலங்கொண்டு



15
உரை
25

       புலவூண் துறந்து - புலாலாகிய ஊண் உண்ணுதலை விலக்கி, பொய்யா விரதத்து - பொய் கூறாமையாகிய விரதத்தொடு பொருந்தி, அவலம் நீத்து - அழுக்காறு அவா முதலியவற்றைக் கைவிட்டு, அறிந்து - பொருணூல்களை உணர்ந்து, அடங்கிய கொள்கை - ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையினை உடையராய், மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய - உண்மைத்திறனை அறிந்த சீரியோர் கூடிய, அருகத்தானத்து - ஸ்ரீகோயிலில், ஐவகை நின்ற சந்தி ஐந்தும் தம்முடன் கூடி வந்து தலைமயங்கிய வான்பெரு மன்றத்து - பஞ்ச பரமேட்டிகள் நிலைபெற்ற ஐந்து சந்தியும் தம்முட் கூடி வந்து கலந்த சிறந்த பெரிய மன்றத்தின்கண், பொலம்பூம் பிண்டி நலங்கிளர் கொழுநிழல் - பொற்பூவினையுடைய அசோகின் எழில் விளங்கும் கொழுவிய நிழலின்கண், நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என - திரு அபிடேக விழா நாளினும் தேர்த் திருநாளினும் சாரணர் வரத்தகுமென்று, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச்சிலாதலம் தொழுது வலம்கொண்டு - சாவகர் யாவரும் கூடியிடப்பெற்ற விளங்காநின்ற ஒளியினையுடைய சிலாவட்டத்தை வணங்கி வலம் செய்து ;

       புலவு ஊண் - புலாலோடே உண்ணும் உணவுமாம். அவலம் - அழுக்காறு அவாமுதலியன. ஐவகை என்றது பஞ்சபரமேட்டிகளை ; அவர்களாவார்: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என இவர். பொலம் - பொன். உலக நோன்பிகள் - உலக வழக்கொடு பொருந்தின விரதிகள் ; அவர் இல்லறத்தினையுடைய சாவகர். விழுமியோர் குழீஇய அருகத் தானத்து மன்று எனவும், ' ஐவகை நின்ற சந்தி எனவும் மாறுக. 'நீரணி விழவு' என்பதற்கு, விழு அயனாதிகள்' என்பர் அடியார்க்குநல்லார். மன்றிற் பிண்டி நீழலில் இட்ட சிலாதலமெனச் சேர்க்க.