10. நாடுகாண் காதை

 

மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக விடைகழி யொருங்குட னீங்கிக்



26
உரை
27

       மலை தலைக் கொண்ட பேர் யாறு போலும் உலக இடை கழி ஒருங்குடன் நீங்கி - மலையிடத்துத் தலைப்பினையுடையவோர் பெரிய யாறு போன்ற உலகின்கண்ணுள்ளோர் போக்கு வரவு செய்தற்கமைந்த ஊர்வாயிலை அக்காலத்துச் செல்வாரொடு கலந்து சென்று அதனை விட்டு நீங்கி ;

       உலகின்கண்ணுள்ளோர் பலரும் புகார்க்கண் வாணிகத்தின் பொருட்டு வந்து சேர்வாராகலானும், எத்துணையும் பெரியதோர் நகரமாகலானும் புகார் நகரினை உலகமே போலக் கொண்டு அதன் வாயிலை உலக இடைகழியென்பர் ; இவ்வாறே அதிலுள்ள அம்பலத்தை உலக அறவியென்று கூறுவர். இனி, 1 "மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்" என்பதனால் உலகின் ஒரு பகுதியை உலகமென்னலும் பொருந்தும். தெரு வொழுங்கிற்கு இடையே கழிதலின் இடைகழி எனப்பட்டது. மலையும் யாறும் முறையே கோபுர வாயிலுக்கும் தெருவிற்கும் உவமங்களாம்.

1. தொல், பொருள், 5.