|
210
|
என்றவ னிசைமொழி யேத்தக் கேட்டதற்கு
ஒன்றிய மாதவ ருயர்மிசை யோங்கி
நிவந்தாங் கொருமுழம் நீணிலம் நீங்கிப்
பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து
|
|
என்று
அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு - என்று கூறி அவ் வருகதேவனது புகழ் மொழிகளைப் போற்றக்
கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர் - அக் கூற்றுக்கு உளம் ஒருப்பட்ட சாரணர், உயர்மிசை
ஓங்கி நிவந்து ஆங்கு ஒரு முழம் நீணிலம் நீங்கி - சிலாவட்டத்தினின்றும் எழுந்து நிலத்தை
விட்டு நீங்கி அந் நிலத்தினும் ஒரு முழம் உயர்ந்து நின்று, பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
- பிறப்பினைத் தரும் பாசம் கவுந்திக்குக் கெடுவதாகவென்று கூறி, அந்தரம் ஆறுஆப் படர்வோர்த்
தொழுது - விசும்பின் வழியே செல்லும் அச் சாரணரைத் தொழுது, பந்தம் அறுகெனப் பணிந்தனர்
போந்து - பாசம் ஒழிகவென்று வணங்கி வந்து ;
கவுந்தி கெடுக என்றது கவுந்திக்குக்
கெடுக என்றவாறு. படர்வோர், வினைப்பெயர், பணிந்தனர், முற்றெச்சம். |
|