10. நாடுகாண் காதை



230





235





240

தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்

காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க
எள்ளுநர் போலுமிவர் என்பூங் கோதையை
முள்ளுடைக் காட்டின் முதுநரி யாகெனக்
கவுந்தி யிட்ட தவந்தரு சாபம்
கட்டிய தாகலின் பட்டதை யறியார்

குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி
நெறியின் நீங்கியோர் நீரல கூறினும்
அறியா மையென் றறியல் வேண்டும்
செய்தவத் தீர்நுந் திருமுன் பிழைத்தோர்க்

குய்திக் காலம் உரையீ ரோவென



229
உரை
240

       தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க - இன்னணம் இவரிகழ்ந்த கொடு மொழியினைக் கேட்டு இரு செவிகளையும் பொத்தித் தன் கணவன் முன்னர்க் கண்ணகி நடுங்கி நிற்ப, எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை - எனது பூங்கோதை போல்வாளை இவர் இகழ்ந்தனர் ஆயினார், முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகென - ஆகலான், முட்கள் நிறைந்த காட்டின்கண் இவர் ஓரியாகவென்று உள்ளத்து எண்ணி, கவுந்தி இட்ட தவந்தரு சாபம் - கவுந்தியடிகளிட்ட தவத்தினான் விளைந்த சாபம், கட்டியது ஆதலின் - இவரைப் பூண்டதாகலான், பட்டதை அறியார் குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி - நறுவிய மலரணிந்த கண்ணகியும் கோவலனும் விளைந்ததனை அறியாராய்க் குறிய நரியினது நெடிய குரலாகக் கூவும் விளியைக் கேட்டு நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும் - நல்லொழுக்க நெறியினின்றும் விலகிய அறிவிலார் நீர்மை அல்லாதனவற்றைச் சொல்லினும் அஃதறியாமையாற் கூறியதாகும் எனப் பெரியோர் உணர்தல் வேண்டும், செய் தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக் காலம் உரையீரோ என - செய்த தவத்தினையுடையீர், உம்முடைய திரு முன்பு தவறு செய்த இவர்க்கு உய்தலுடைத்தாங் காலத்தை மொழிந்தருளுவீர் என்று கூற ;

       போலும், ஒப்பில்போலி. நடுங்குதல் தம் பொருட்டால் விளைந்தமையான் என்க. பரத்தையும் விடனும் கண்ணகி கோவலன் இவ்விருவரையுமே இகழ்ந்தனராகவும், ''எள்ளுநர் போலுமிவ ரென்பூங் கோதையை'' எனக் கண்ணகியையே இகழ்ந்ததாகக் கவுந்தியடிகள் கூறியது ஆண் மக்களை இழித்துக் கூறினும் பெண்மக்களை இகழ்தல் தகாது என்னும் உலக வழக்குப் பற்றிப் போலும். பட்டதை அறியார் ஆயினார்; 'முதுநரி யாகென' உள்ளத்தே நினைந்து சபித்தலின். பின்னர் அறிந்த தெவ்வாறெனின்? அவர் கண்முன் நரியாயினவாற்றானும், பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்தே இவரல்லது வேறு சாபமிட வல்லாரில்லையாகலானும் இச் சாபம் இவரானே விளைந்ததெனக் கண்டனர் என்க. அறியல் வேண்டும் என்றது அவருட்கோள் ; உரையீரோ வென்றது கவுந்தியை நோக்கிக் கூறியது. இதனானே கண்ணகியும் கோவலனும் பிழைத்தோர்ப் பொறுக்கும் பெருமையினை யுடையார் என்பதும், பிறர் இன்னல் கண்டு பொறார் என்பதும் அறியக்கிடக்கின்றன.