1. காடுகாண் காதை

1 திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த
ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக்


1
உரை
4

        திங்கள் மூன்று அடுக்கிய திரு முக் குடைக்கீழ் - மூன்று திங்களை அடுக்கி வைத்தாற் போலும் அழகிய முக்குடையின் கீழ், செங்கதிர் ஞாயிற்றுத் திகழ்ஒளி சிறந்து - சிவந்த கதிர்களை யுடைய ஞாயிற்றின் ஒளியினும் விளங்கும் ஒளி மிக, கோதை தாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த - மாலையாக மலர்ந்து தொங்கும் அசோகின் கொழுவிய நிழற்கண் எழுந்தருளிய, ஆதிஇல் தோற்றத்து அறிவனை வணங்கி - தன்னினும் ஒன்று முதற்கண் இல்லாத தோற்றத்தினையுடைய அருகதேவனைத் தொழுது ;

       
திங்கள் மூன்றடுக்கிய என்பதற்குத் திங்கள் முதலிய மூன்றடுக் கிய எனலுமாம். முக்குடை - சந்திராதித்தியம், நித்தியவினோதம், சகலபாசனம். சிறந்து - சிறப்ப எனத் திரிக்க. கடவுட்டன்மை யால் அப் பிண்டி எஞ்ஞான்றும் மாலையாகப் பூத்தலின் கோதை தாழ் பிண்டி என்றார் என்க. ஆதியில் தோற்றத்து அறிவனென்றது தனக்கொரு முதல்வன் இல்லாதவன் என்றவாறு. இனி, தோற்றத் தின்கண் முதல் இல்லாதவ னெனலுமாம் ; பிறப்பிலான் என்றபடி. அறிவன் - உறையூரிலருகன்.