அவ்வழிப்
படரீராயின் - அவ் வலப்பக்கத்து நெறியிற் செல்லீராயின், இடத்து - இடப்பக்கத்தே,
செவ்வழிப் பண்ணின் சிறைவண்டு அரற்றும் - சிறகினையுடைய வண்டுகள் செவ்வழிப் பண்ணைப்போல்
பாடுகின்ற, தடம் தாழ் வயலொடு தண்பூங்காவொடு - குளங்களோடும் தாழ்ந்த வயல்களோடும்
குளிர்ந்த பூஞ்சோலையோடும், கடம் பல கிடந்த காடு உடன் கழி்ந்து - அருஞ்சுரங்கள்
பலவும் இடைக்கிடந்த காட்டு நெறியையுங் கடந்து, திருமால் குன்றத்துச் செல்குவிர் ஆயின்
- அழகர் திருமலைக்கண் செல்குவீராயின், பெருமால் கெடுக்கும் பிலம் உண்டு - அங்கே
மிக்க மயக்கத்தினைக் கெடுக்கும் பிலத்து நெறி ஒன்று உண்டு ;
செவ்வழி
- செவ்வழியாழ் ; முல்லை நிலத்திற்குரிய பண். கடம் - பாலை நிலவழி. திருமால் குன்றம்
- திருமாலிருஞ் சோலைமலை.
|