1. காடுகாண் காதை




115
இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்
இம்மையு மறுமையு மிரண்டு மின்றியோர்
செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ்
வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின்
திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும்


112
உரை
117

       இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் - இப்பிறப்பிற்கு இன்பமும் மறு பிறப்பிற்கு இன்பமும், இம்மையும் மறுமையும் இரண்டு மின்றி ஓர் செம்மையில் நிற்பதும் செப்பு
மின்நீயிர் - இம்மை யின்பமும் மறுமை யின்பமுமாய இரண்டு மின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாய்த் தூயதாய் அழிவில்லாது நிற்கும் இன்பமுமாகிய பொருள்களை நீவிர் கூறுமின்,
இவ் வரைத்தாள் வாழ்வேன், - இம் மலையடிக்கண் வாழ்வேன், வரோத்தமை என்பேன் - வரோத்தமை யெனப் பெயர் கூறப் படுவேன், உரைத்தார்க்கு உரியேன்-அம்மூன்று உண்மையினையும் உரைத்தார்க்குயான் எத் தொழிற்கும் உரியேனாவேன், உரைத்தீர் ஆயின் திருத்தக்கீர்க்குத் திறந்தேன் கதவு எனும் - ஆகலின், நீவிர் அவற்றைக் கூறுவிராயின் அழகிய தகுதியையுடைய நுமக்கு இப் பிலவாயிற் கதவினைத் திறப்பேன் என்று கூறும்.

       
இம்மை இன்பம் - புகழ் ; பொருள் எனவுங் கூறுப. மறுமை இன்பம் - அறம். இன்பந் தருவனவற்றை இன்பமெனக் கூறினார். செம்மை - தூய்மை; நிற்பது - நிலை பெறுவது ; ஈண்டு வீடு 1"பிறப் பென்னும் பேதைமை" என்னுங் குறளிற் செம்பொருள் என்பதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையை நோக்குக. திறந்தேன், விரை பொருள் பற்றி எதிர்காலம் இறந்த காலமாகச் சொல்லப்பட்டது.


1. குறள். 358.