1. காடுகாண் காதை



120
கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப்
புதவம் பலவுள போகிடை கழியன
ஒட்டுப் புதவமொன் றுண்டத னும்பர்
வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி
இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற்
பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும்


118
உரை
123

      கதவம் திறந்து அவள் காட்டிய நன்னெறி - உரைப் பின் அவள் கதவினைத் திறந்து காட்டிய நல்ல வழிக்கண், புதவம் பல உள போகு இடை கழியன - நீண்ட இடைகழியிடத்தன
வாகிய வாயில்கள் பல வுள்ளன ; ஒட்டுப் புதவம் ஒன்று உண்டு- அவற்றைக் கழிந்து செல்லின் இரட்டைக் கதவினையுடைய வாயில் ஒன்றுளது, அதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி - அதற்குமேல் வட்டிகையாக எழுதிய பொலிவுற்ற கொடிபோல்வாள் வந்து எதிர்ப்பட்டு, இறுதிஇல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் - முடிவிலா இன்பம் யாது அதனை எனக்கு இவ் விடத்து உரைப்பீராயின், பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும் - நீவிர் இம் முப்பொரு
ளினும் விரும்பிய பொருளினைப் பெறுகுவீர் என்று கூறுவாள் ;

      
புதவம் - கதவு; ஈண்டு வாயில். போகு - நெடுமை. பூங்கொடி - பூங்கொடி போல்வாள். வட்டிகை - சித்திரம். இனி வட்டிகை என்பதற்கு எழுதுகோல் எனப் பொருள் கொண்டு எழுதுகோலால் எழுதிய எனலுமாம். இறுதியில் இன்பம் உரைத்தலாவது இறுதியில்லா இன்பம் யாதென வுரைத்தல். இறுதி இல் இன்பம்-வீடு. போலும் - ஒப்பில் போலி. பேணிய பொருள் என்பதற்குப் புகழ், அறம், வீடு என்னும் மூன்றனுள் விரும்பிய பொருள் என்க.