1. காடுகாண் காதை

10 தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று
வைகறை யாமத்து வாரணங் கழிந்து
வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற
வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர்
இளமரக் கானத் திருக்கை புக்குழி


10
உரை
14

       தென்திசை மருங்கில் செலவு விருப்புற்று - தென்றிசைக் கண்ணே செல்லுதலை விரும்பி, வைகறை யாமத்து வாரணம் கழிந்து - உறையூரை வைகறையாகிய யாமத்தில் விட்டு நீங்கி, வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற - ஞாயிறு கீழ்த்திசைக்கண்ணே விளக்கமுற்றுத் தோன்ற, வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த - வளவிய நீர் நிறைந்த வயல்களும் குளங்களும் பொலிவு பெற்ற, இளமரக் கானத்து இருக்கை புக்குழி - இளமரக் காவின்கண் மண்டபத்துப் புக்க காலை ;

       வணங்கி மொழிந்து அடங்கி விருப்புற்றுக் கழிந்து புக்குழி என்க.