1. காடுகாண் காதை

138 ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின்


138
உரை
139

       மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றாமரைத்தாள் உள்ளம் பொருந்துமின் - நீவிர் அப் பொய்கைகளின் பயனை விரும்பீராயின் அவற்றை யெண்ணாது அம் மலை மீது நின்றோனுடைய அழகிய தாமரை மலரை ஒத்த திருவடிகளை நினைமின், உள்ளம் பொருந்துவிராயின் மற்றவன் புள் அணி நீள்கொடிப் புணர்நிலை தோன்றும் - அங்ஙனம் நினைப்பீராயின் அத் திருமாலின் கலுழன் எழுதிய அழகிய நீண்ட கொடிமரம் பொருந்தி நிற்கும் இடம் காணப்படும், தோன்றிய பின் அவன் துணைமலர்த்தாள் இணை ஏன்று துயர் கெடுக்கும் - காணப்பட்ட அளவில் அத் தேவனுடைய இணைத்த மலர் போலும் இரண்டு திருவடிகளும் நும்மை ஏற்றுக்கொண்டு நும்
பிறவித் துன்பத்தினைக் கெடுக்கும் ;

       கொடி புணர்நிலை என்றது கொடிமரம் நிற்குமிடம் என்றவாறு. நீவிர் அவ்விடைச் சென்று அதனைக் காண்பீர் என்பான் தோன்றும் என்றான். கெடுக்கும், முற்று, அவ்வழிப் படரீராயின், குன்றத்துச் செல்குவீராயின், பிலமுண்டு; ஆங்குப் பொய்கை மூன்றுள; பொருந்துவிராயின், ஆடுவிராயின், எய்துவிராயின் எய்துவிர்; வேண்டுதிராயின்; வலம் செய்தால், தோன்றி. என்பேன் செப்புமின் திறந்தேன் எனும்; உம்பர்த் தோன்றி உரைத்தால் பெறுதிர் எனும்; நீக்குவல் எனும்; காட்டினள் பெயரும்; மந்திரம் இரண்டும் ஓதி ஆடில் அவை காண்டகு மரபினவல்ல; பொருந்துமின்; தோன்றும்; கெடுக்கும்; என முடிக்க.