1. காடுகாண் காதை




155




160
நலம்புரி கொள்கை நான்மறை யாள
பிலம்புக வேண்டும் பெற்றிஈங் கில்லை
கப்பத் திந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய்
இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம்
பிறந்த பிறப்பிற் காணா யோநீ
வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்
கியாவது முண்டோ எய்தா அரும்பொருள்
காமுறு தெய்வங் கண்டடி பணிய
நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும்
என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக்
குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன்
அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப்


152
உரை
164

       நலம் புரி கொள்கை நான்மறையாள-நல்லொழுக்கத்தினை விரும்பிய கொள்கையினையுடைய நான்மறை வல்லோனே, பிலம் புகவேண்டும் பெற்றி ஈங்கு இல்லை - நீ கூறிய பிலத்தின்கண் புகுதற்குரிய தன்மை எம்மிடத்து இல்லை ; ஏன் எனின்?, கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் - ஆயுக் கற்பத்தினையுடைய இந்திரன் செய்த வியாகரணத்தினை, மெய்ப்பாட் டியற்கை விளங்கக் காணாய்-அருகதேவன் அருளிய பரமாகமத்தின்கண் தோன்றக் காண்பாய், ஆகலாற் புண்ணிய சரவணம் பொருந்துதல் வேண்டா ; இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் பிறந்த பிறப்பிற் காணாயோ நீ - நீ முற்பிறப்பிற் செய்தன யாவும் இப் பிறப்பிலே காண்கின்றிலையோ, (காண்பாய் என்றபடி) ஆகலான் யாம் பவகாரணி படிதல் வேண்டா ; வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள் - உண்மைநெறியிற் பிறழாது பிற உயிர்களைப் பேணுவோர்க்கு அடையக் கூடாத அரிய பொருள் சிறிதேனும் உண்டா, (இல்லை என்றபடி) ஆகலான் இட்ட சித்தியினை எய்த வேண்டுவதில்லை ; காமுறு தெய்வம் கண்டு அடி பணிய நீ போ - நீ விரும்பிய திருமாலாகிய கடவுளைக் கண்டு அவன் திருவடிகளைத் தொழ நீ செல்வாய் ; யாங்களும் நீள் நெறிப் படர்குதும் - நாங்களும் நீண்ட வழிக்கண் செல்லுவோம் ; என்று அம் மறையோற்கு இசைமொழி உணர்த்தி - என அவ் வந்தணனுக்குப் பொருந்தும் மொழிகளை அறிவித்து, குன்றாக் கொள்கைக் கோவலன் தன்னுடன் அன்றைப் பகல் ஓர் அரும் பதித் தங்கி - உயர்ந்த கோட்பாட்டினை யுடைய கோவலனோடு அற்றைப் பகலில் ஓர் அரிய ஊரின்கண் தங்கி,

       நலம்புரி கொள்கை நான்மறையாள என்றது இகழ்ச்சி. கற்பம் எனற்பாலது கப்பம் என்றாயிற்று. இந்திரன் காட்டிய நூல் - ஐந்திரம். நூலினை யென்னும் உருபு தொக்கது. மெய்ப்பாட்டியற்கை -
பரமாகமம். இறந்த பிறப்பின் எய்தியதனைப் பிறந்த பிறப்பின் அறிதல் என்பதனை, 1"இறந்த பிறப்பிற்றாம் செய்த வினையைப், பிறந்த பிறப்பா லறிக - பிறந்திருந்து, செய்யும் வினையாலறிக
இனிப்பிறந், தெய்தும் வினையின் பயன்" என்பதனா லறிக.

       வாய்மையும் கொல்லாமையுமே தலையாய அறங்கள் என்பதனைப் பொதுமறையானறிக. பொய்கை மூன்றினும் படிதலாலெய்தும் பயனெல்லாம் எங்கள் சமயநெறி நிற்றலால் எய்தற்பால
மாகலின் அவற்றிற் படிதல் வோண்டாவென்பார் 'பிலம்புக வேண்டும் பெற்றியீங் கில்லை' என்றார். அன்றைப் பகல் என மென்றொடர்க் குற்றுகரம் திரியாது ஐகாரம் பெற்று முடிதலை 2"அல்லது கிளப்பினெல்லா மொழியுஞ் சொல்லிய பண்பி னியற்கை யாகும்" என்னுஞ் சூத்திரத்து இலேசான் முடிப்பர்.


1. அறநெறி. 59. 2. தொல் எழுத். 425.