மேலோர் ஆயினும் - இருந்தவமுடையோரும்,
நூலோர் ஆயினும் - கற்றறிந்தோரும், பால்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும் - நன்மை
தீமைகளின் கூறிபாடுணர்ந்தோரும், பிணி எனக்கொண்டு பிறக்கிட்டு ஒழியும் - உள்ளங்கவற்றும்
நோய் என்று கருதி முகம் பாராது விட்டுவிலகுகின்ற,. கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம்
என - வரைவின் மகளிருடைய வாழ்வு மிக இழிந்தது என்று சொல்லி, செவ்வரி ஒழுகிய செழுங்கடை
மழைக்கண் - சிவந்த அரி படர்ந்த வளவிய கடையினையுடைய குளிர்ந்த கண்களால், வெண்முத்து
உதிர்த்து - வெள்ளிய முத்துப் போலும் நீரைச் சிந்தி, வெண்ணிலாத் திகழும் தண்முத்து
ஒருகாழ் தன் கையாற் பரிந்து - வெள்ளிய நிலாப்போல் விளங்கும் குளிர்ந்த தனி முத்து
வடத்தினையும் பூட்டிய தனது கையினாலேயே அறுத்து வீசி, துனி உற்று என்னையும் துறந்தனள்
ஆதலின் - வெகுண்டு என்னையும் துறந்தாள் ஆகையால், மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
- நீங்கள் மதுரை என்னும் பழம்பதியாகிய பெரிய நகரத்திற்கு வந்ததனை, எதிர்வழிப்பட்டோர்
எனக்கு ஆங்கு உரைப்ப - வழிக்கண் எதிர்ப்பட்டோர் எனக்குக் கூறுதலான், சாத்தொடு
போந்து தனித்துயர் உழந்தேன் - வாணிகச் சாத்தொடு போந்து தனிமையால் துன்புற்று
வருந்தினேன், பாத்தரும் பண்ப நின் பணி மொழி யாது என - பகுத்தல் அரிய பண்பினையுடையாய்
அதற்கு நீ பணித்திடும் மாற்றம் யாதென்று கேட்ப ;
பால்வகை
தெரிந்த பகுதியோர் - ஓதாது நன்மை தீமைகளை அறிவோர் என்றும், மதி நுட்பமுடையோர்
என்றும் கூறுவர் பழைய உரையாளர்கள். பிறப்பு வீடு என்பவற்றின் துன்ப வின்பக் கூறு
பாடுகளை யறிந்த மெய்யுணர்வினர் எனலுமாம். ஆயினும் என்பது விகற்பமுணர்த்தும். பிறக்கிடுதல்
- பின்னிடல் ; அஃதாவது முகம் பாராமை. ஏகாரம், தேற்றம். போலும் என்பது போன்ம்
என்றாயது. என்னையும் - துறவா என்னையும் ; உம்மை - சிறப்பு, சாத்து - வணிகர் கூட்டம்.
பாத்தல் - பகுத்தல் ; ஈண்டுப் பிரித்தல். இனி, பாத்தரும் பண்பு - பிறர்க்கில்லாத
குணம் என்றுமாம்.
|