மயக்கும் தெய்வம் இவ் வன் காட்டு
உண்டு என - அறிவினை மயக்கும் தெய்வம் இவ் வலிய காட்டின்கண் உண்டென்று, வியத்தகு
மறையோன் விளம்பினன் ஆதலின் - வியக்கத்தக்க
அவ் வேதியன் கூறினன் ஆகலான், வஞ்சம் பெயர்க்கும் மந்திரத்தால் - வஞ்சத்தைப்
போக்கும் மந்திரத்தினால், இவ் ஐஞ்சில் ஓதியை அறிகுவென் யான் என - இந்த ஐவகைப்பட்ட
சிலவாகிய கூந்தலையுடையாளின் உண்மையை யான் அறிகுவேன் என்று கருதி, கோவலன் நாவிற்
கூறிய மந்திரம் - கோவலன் தனது நாவினாற் சொல்லிய மந்திரம், பாய்கலைப் பாவை
மந்திரம் ஆதலின் - பாய்ந்து செல்லும் கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையின் மந்திரம்
ஆகலான் அஞ்சி, வனசாரிணியான் மயக்கம் செய்தேன் - யான் இவ் வனத்தின்கண் திரியும்
இயக்கி, நினக்கு மயக்கம் செய்ய எண்ணினேன், புனமயிற்சாயற்கும் - கானமயில் போலும்
மென்மையை உடைய நின்
மனைவிக்கும், புண்ணிய முதல்விக்கும் - தவநெறி நிற்கும் கவுந்தியடிகட்கும், என் திறம்
உரையாது ஏகு என்று ஏக - யான் செய்த இப் பிழையினைக் கூறாது செல்கவென்று சொல்லித்தானுஞ்
செல்ல ;
மயக்கும்
தெய்வம் இவ் வன் காட்டுண்டென என்றது, 1"ஆரிடை
யுண்டோர் ஆரஞர்த் தெய்வம்" என முன் கூறியதனை. வியத்தகு மறையோன் என்றது பலவற்றையும்
அறிந்து கூறிய சதுரப் பாட்டினால். வஞ்சம் - வஞ்சவுரு. ஓதியை - ஓதியையுடையாள் யாவளென்பதனை.
கூறினன் ; அங்ஙனங் கூறிய மந்திரம் என்க. வனசாரிணி- வனத்திற் சரிப்பவள். தவத்தினும்
கற்புச் சிறந்ததாகலான் கண்ணகியை முற்கூறினார். இவ் விருவரும் சாயலும் அறனும் உடையாரேனும்
தவறு கண்ட வழி வெகுண்டு சபிப்பர் என்று கருதி அவர்க்கு உரையற்கவென இரந்தாள்.
1. சிலப்.
11: 144.
|