1. காடுகாண் காதை




210




215
குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும்
விரவிய பூம்பொழில் விளங்கிய விருக்கை
ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது
மாரி வளம்பெறா வில்லேர் உழவர்
கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி
வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக்
கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும்
விழிநுதற் குமரி விண்ணோர் பாவை
மையறு சிறப்பின் வான நாடி
ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென்.


207
உரை
216

       குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய - குராவும் வெண்கடம்பும் கோங்கும் வேங்கையும் தம்மிற் கலந்துள்ள, பூம்பொழில் விளங்கிய இருக்கை - பொலிவினையுடைய
சோலை சூழ்ந்து விளங்கிய இருப்பிடத்து, ஆர் இடை அத்தத்து இயங்குநர் அல்லது - அரிய இடங்களையுடைய வழிகளிற் செல்வோரது வளத்தினைப் பெறுவதல்லது, மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் - மழையினானாகும் வளத்தினைப் பெறுதலில்லாத வில்லாகிய ஏரினையுடைய மறவர், கூற்று
உறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி - கூற்றத்தினை ஒத்த வலியுடனே வளைந்த வில்லைக் கையிலேந்தி, வேற்றுப் புலம் போகி - பகைவர் முனையிடத்துச் செல்ல, நல் வெற்றம் கொடுத்துக்
கழிபேர் ஆண்மைக் கடன் பார்த்து இருக்கும் - அவர்க்கு நல்ல வென்றியைக் கொடுத்து அதற்கு விலையாக மிக்க ஆண்மைத் தன்மையை உடைய அவிப்பலியாகிய கடனை எதிர்நோக்கும்,
விழி நுதற் குமரி - நெற்றியிற் கண்ணையுடைய குமரியும், விண்ணோர் பாவை - தேவர் போற்றும் பாவையும், மை யறு சிறப்பின் வான நாடி - குற்ற மற்ற சிறப்பினையுடைய வானநாட்டை
யுடையவளுமாகிய, ஐயை தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் - கொற்றவையின் கோயிலைச் சென்றடைந்தனர் அப்பொழுது ;


       
பெறா - பெறுதலை விரும்பாத. 'ஆரிடை யத்தத் தியங்குநரல்லது, மாரி வளம்பெறா வில்லே ருழவர்' என்ற கருத்து 1"வானம் வேண்டா வறனில் வாழ்க்கை, நோன்ஞாண் வினைஞர்" எனவும், 2"கானுயர் மருங்கிற் கவலை யல்லது, வானம் வேண்டா வில்லே ருழவர்"
எனவும் அகப்பாட்டில் வந்திருத்தல் காண்க. போகி என்பதனைப் போகவெனத் திரிக்க. உழவர் ஏந்திப் போகக் கொடுத்துப் பார்த்திருக்கும் ஐயை என்க. இனித் திரியாது உழவர்க்கு ஏந்திப்
போகிக் கொடுத்துப் பார்த்திருக்கும் என முடிப்பினும் அமையும். கழி பேராண்மைக் கடன் - தன்னைத்தான் இடும் பலிக்கடன். மயங்கதரழுவத்து விளங்கிய இருக்கைக்கட் கோட்டம் என்க.

       
விழிநுதல் - நுதல்விழி என்க.

       
இது நிலைமண்டில வாசிரியப்பா.

              
        காடுகாண் காதை முற்றிற்று.


1. அகம் 186. 2. அகம். 193