1. காடுகாண் காதை





30
முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று
இடியுடைப் பெருமழை யெய்தா தேகப்
பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப
மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத்
தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந் தோனை


26
உரை
31

       முடிவளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று - இவன் நம் முதல்வனது சென்னி முடியிலே வளையை உடைத் தோன் என்று, இடி உடைப் பெருமழை எய்தாது ஏக - இடியினையுடைய பெரிய மழை பெய்தல் எய்தாது ஏகிற்றாக, பிழையாவிளையுட் பெருவளஞ்சுரப்ப - தப்பாத விளையுளாகிய மிக்க வளஞ்சுரக்கும் வண்ணம், மழை பிணித்து ஆண்ட மன்னவன்
வாழ்கென - அம் மழையினை விலங்கிட்டு ஆண்ட மன்னவன் வாழ்வானாக என, தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி - குற்றம் நீங்கிய பெருமையினையுடைய பாண்டியன் வாழ்த்தி, மாமுது மறையோன் வந்திருந்தோனை - வந்து தங்கியிருந்த சிறந்த முதிய அந்தணனை ;

       முடியில் வளையை உடைத்தென்றது முடியின் ஐந்துறுப்புக் களுள் ஒன்றாய கிம்புரியை உடைத்து என்றவாறு. முடியின் ஐந்துறுப் புக்களை 1"தாம முகுடம் பதுமங் கோடகம், கிம்புரி முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்" என்பதனானறிக. இனி, முதல்வன் முடியை வளை யாலுடைத்தோனெனலுமாம் ; இதனை 2"காய்சின மடங்கலன்னான் ... வீரன்" எனவும், 3"இன்னன பேசி ... அடித்தான்" எனவும் வரூஉம் இரு திருவிளையாடற் புராணச் செய்யுளானும் உணர்க். 4"வச்சிரத் தடக்கை யமரர் கோமான், உச்சிப் பொன் முடி யொளிவளை யுடைத்தகை" என்பர் பின்னும். பிழையா விளையுள் - வளந்தருதல் தப்பாத விளைநிலமுமாம். வந்திருந்தோன் - வினைப்பெயர். வேல்விடுத்துக் கடலை வற்றச் செய்ததும், இந்திரன் பூட்டிய ஆரத்தைப் பூண்டதும், இந்திரன் முடிமேல் வளை யெறிந்ததும், மேகத்தைத் தளையிட்டதும் உக்கிரவன்மன் (உக்கிர குமார பாண்டியன்) செயல்களாகத் திருவிளையாடற் புராணங்கள் கூறும்.


1. திவா. 7-வது                 2. பரஞ். திருவிளை. இந்திரன்முடி. 53
3.
திருவால. திருவிளை. இந்திரன்முடி 4. சிலப். 23; 50-1.