2. வேட்டுவ வரி



விலைப்பலி யுண்ணும் மலர்பலி பீடிகைக்
கலைப்பரி யூர்தியைக் கைதொழு தேத்தி



43
உரை
44

விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகை - தான் தந்த வெற்றியின் விலையாகிய பலியினை யுண்ணுகின்ற விரிந்த பலி பீடத்தை முதலிற் றொழுது, கலைப்பரி ஊர்தியைக் கை தொழுது ஏத்தி - பின்னர் விரைந்த செலவினையுடைய கலையை ஊர்தியாகவுடைய கொற்றவையைக் கையால் வணங்கி நாவாற் போற்றி ;

பலியுண்ணும் பீடிகை ; பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது ; உண்ணும் ஊர்தியை எனலுமாம். மலர்ப்பலி பீடிகை எனப் பாடங்கொண்டு, மலர்ப்பலி பீடிகை என்றது கோட்டத்தை எனவுரைப்பர் அரும்பதவுரை யாசிரியர். ஏத்துதல் சாலினியின் தொழில். பீடிகைக்கு அருகே உள்ள தலைஊர்தியைத் தொழுது எனலுமாம். கலைப் பரியூர்தி - தெய்வ வுருக்கொண்ட குமரி.