2. வேட்டுவ வரி

தமர்தொழ வந்த குமரிக் கோலத்து
அமரிளங் குமரியும் அருளினள்
வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே;



72
உரை
74

        தமர் தொழ வந்த குமரிக் கோலத்து அமர் இளங் குமரியும் - திருமாலும் நான்முகனும் முதலியோர் வணங்கத் தோன்றிய கன்னியின் கோலத்தினையுடைய யாவரும் விரும்பும் அக் குமரியும், அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததால் எனவே-இவள் கொண்ட வரிக்கோலம் வாய்ப்புடையது என்று கண்டோர் கூற அருளினாள்.

        தொழ வந்த குமரி - கொற்றவை. இளங்குமரி - எயினர் குலக் கன்னி. தமர் தொழ வந்த குமரியும் என இயைத்து, மறவர் தொழவந்த என்றுரைத்தலுமாம். சாலினி கொண்ட கோலம் வாய்ப்புடைத்தென்று அருளினாள் என்பர் அடியார்க்கு நல்லார். சாலினி உற்று நிறுத்து ஓச்சி வியப்ப ஆடிக் கடன் தாரும் என, குமரியைக் கட்டிச் சுற்றிச் சாத்திப் பூட்டி உடீஇக் கொடுத்து ஏற்றிப் பரசிப் பின்வரத் துவைப்ப நிறுத்த, ஏத்திக் கூந்தலை, செல்வி, ஆட்டி, பாவை, கொழுந்து, மணி எனத் தெய்வம் உற்று உரைப்ப, கண்ணகி ஒடுங்கி நிற்ப, சென்னியையும் நாட்டத்தையுமுடைய வாய்ச்சி, நகைச்சி, கண்டி, வளைத்தோள், முலைச்சி, ஏந்தி, மேகலையாட்டி, கொற்றவை, தையல் ஆகிய குமரிக் கோலத்துக் குமரியும் அருளினள் என முடிக்க. உரைப்பாட்டுமடை - உரைப்பாட்டை நடுவே மடுத்தல்.