2. வேட்டுவ வரி





1

        உரைப்பாட்டுமடை.

             வேறு

நாகம் நாறு நரந்தம் நிரந்தன
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல்
பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே ;



1
உரை
1

        "நாகநாறு ....... முன்றிலே" நாகம் நாறு நரந்தம் நிரந்தன - மணம் நாறும் சுரபுன்னையும் நாரத்தையும் ஒழுங்கு படவுள்ளன; ஆவும் ஆரமும் ஓங்கின - ஆச்சாவும் சந்தனமும் உயர்ந்து வளர்ந்தன ; எங்கணும் சேவும் மாவும் செறிந்தன - எவ்விடத்தும் சேமரமும் மாமரமும் நெருங்கின ; கண்ணுதல் பாகம் ஆளுடையாள் பலி முன்றிலே - நெற்றியிற் கண்ணினையுடைய சிவபெருமானது இடப் பாகத்தை ஆள்பவளாகிய கொற்றவையின் பலிகொள்ளும் முன்றிலின்கண் ;

        பலிமுன்றிலின்கண் நிரந்தன, ஓங்கின, செறிந்தன எனக் கூட்டுக. பின்வருவனவற்றையும் இவ்வாறே கொள்க. 'எங்கணும்' என்பதனை எங்கணும் கூட்டுக. ஆரம் - ஆத்தி எனலும், சே - உழிஞ்சில் எனலும் ஆம். "ஐயுங் கண்ணு மல்லாப் பொருள் வயின், மெய்யுருபு தொகா விறுதி யான" என்ற விதியால் கண்ணுருபு இறுதியிற் றொக்கது.