2. வேட்டுவ வரி

3

மரவம் பாதிரி புன்னை மணங்கமழ்
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல்
அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செயும்
திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே ;



3
உரை
3

        "மரவம் ...... முன்றிலே" மரவம் பாதிரி புன்னை மணம் கமழ் குரவம் கோங்கம் மலர்ந்தன - வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும் மணம் வீசும் குராவும் கோங்கமும் ஆய இவை பூத்தன; கொம்பர்மேல் அரவ வண்டு இனம் ஆர்த்து உடன்யாழ் செயும் - அவற்றின் கொம்புகளில் ஒலியினையுடைய வண்டுக் கூட்டம் முழங்கி வீணைபோலப் பாடும்; திருவ மாற்கு இளையாள் திருமுன்றிலே-திருமாலுக்கு இளையாளுடைய முன்றிலின் கண்;

        யாழ்செயும் - யாழின் இசைபோலப் பாடும். திருவ என்பதன் கண் அ அசை. இவை முன்றிலின்சிறப்பு.