2. வேட்டுவ வரி

6

பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ்
ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ
ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த
வேய்வில் எயினர் குலனே குலனும் ;



6
உரை
6

        "பாய்கலைப் பாவை.......குலனும்" பாய்கலைப்பாவை அணிகொண்டு நின்ற இவ் ஆய்தொடி நல்லாள் தவம் என்னை கொல்லோ - தாவும் கலையை ஊர்தியாக வுடைய கொற்றவையின் அழகினைக் கொண்டு நின்ற இந்த அழகிய வளையலையுடைய பெண்ணின் தவம் எத்தகையதோ; ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய் வில் எயினர் குலனே குலனும் - இக் குமரி தோன்றிய குடியிற் பிறந்த மூங்கில் வில்லினையுடைய மறவர்களது குலமே சிறந்த குலம் ;

        இவை மூன்றும் 1"வெறியறி சிறப்பின்" என்னும் சூத்திரத்து 'வாடாவள்ளி' என்பதனான், வள்ளிக் கூத்து எனப்படும்; என்னை? 'மண்டம ரட்ட மறவர் குழாத்திடைக், கண்ட முருகனுங் கண் களித்தான் - கண்டே, குறமகள் வள்ளிதன் கோலங்கொண் டாடப், பிறமக ணோற்றாள் பெரிது' என்பது வள்ளி, 'ஏவில் எயினர்' எனப் பாடங்கொள்வர் அரும்பதவுரை யாசிரியர்.


1. தொல், புறத். 5.