2. வேட்டுவ வரி





7

       

ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக்
கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால்
வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய் ;



7
உரை
7

        "ஆனைத்தோல்........நிற்பாய்" ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரி உடுத்து - யானையின் தோலை மேலே போர்த்துப் புலியின் தோலை அரைக்கண் உடுத்து, கானத்து எருமைக் கருந்தலைமேல் நின்றாயால் - காட்டின்கண் எருமைக் கடாவினது கரிய தலையின் மீது நின்றாய்; வானோர் வணங்க மறைமேல் மறையாகி - தேவர் யாவரும் வணங்க வேதங்களுக்கு அப்பாற்பட்ட மறைந்த பொருளாய், ஞானக் கொழுந்தாய் நடுக்கு இன்றியே நிற்பாய் - அறிவின் கொழுந்தாகிச் சலித்தல் இன்றி யாண்டும் நிலைத்து நிற்பவளே இஃது என்ன மாயமோ ;

        வணங்க மறையாகிக் கொழுந்தாய் நிற்பாய் போர்த்து உடுத்து நின்றாய் இஃதென்ன மாயமோ என்க. பின் வருவனவற்றையும் இவ்வாறே மாறுக. கானம் என்பதனை எருமைக்கு அடையாக்கினு மமையும். எருமை - சாதிப்பெயர்.