2. வேட்டுவ வரி

8

வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய் ;



8
உரை
8

        "வரிவளைக்கை.....நிற்பாய்" வரிவளைக்கை வாள் ஏந்தி மா மயிடற் செற்று - வரிகள் பொருந்திய வளையணிந்த கையில் வாளைத் தாங்கிப் பெரிய மகிடாசுரனை அழித்து, கரிய திரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் - கரிய முறுக்குண்ட கொம்பினையுடைய கலைமான்மீது நின்றாய்; அரி அரன் பூமே லோன் அகமலர்மேல் மன்னும் - திருமாலும் சிவபிரானும் நான் முகனும் ஆகிய இவர்களுடைய உள்ளத் தாமரையில் நிலைபெற்றிருக்கும், விரிகதிர் அஞ்சோதி விளக்காகியே நிற்பாய் - விரிந்த கதிர்களையுடைய அழகிய ஒளிவிடும் விளக்கமாகி நிற்பவளே, இஃதென்ன மாயமோ ;

அகமலர்மேல் மன்னும் விளக்காகி நிற்பாய் என்க.