2. வேட்டுவ வரி

11

ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும்
        ஆர்ப்ப வார்ப்ப
மாயஞ்செய் வாளவுணர் வீழ நங்கை மரக்கான்மேல்
        வாளமலை யாடும் போலும்
மாயஞ்செய் வாளவுணர் வீழ நங்கை மரக்கான்மேல்
        வாளமலை யாடு மாயின்
காயா மலர்மேனி யேத்தி வானோர் கைபெய் மலர்மாரி
        காட்டும் போலும் ;



11
உரை
11

        "ஆய்பொன் ...... காட்டும் போலும்" ஆய்பொன் அரிச் சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப - அழகிய பொன்னாற் செய்த பருக்கையினையுடைய சிலம்பும் வளையும் மேகலையும் ஒலிப்ப, மாயஞ்செய் வாள்அவுணர் வீழ நங்கை மரக்கால்மேல் வாள் அமலை ஆடும் போலும் - வஞ்சம் புரிகின்ற வாட்டொழிலிற் சிறந்த அசுரர்கள் அழியுமாறு கொற்றவை மரக்காலின்மீது நின்று வாட்கூத்தினை ஆடா நிற்கும் ; மாயஞ் செய் வாள்அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள் அமலை ஆடும் ஆயின் - வஞ்சம் செய்யும் வாளினையுடைய அசுரர் ஒழிய இவள் மரக்காலின்மீது ஒள்வாள் அமலை ஆடுவாளாயின், காயாமலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர் மாரி காட்டும் போலும் - இவளுடைய காயாம் பூப் போலும் மேனியைப் போற்றித் தேவர்கள் தம் கைகளாற் சொரியும் மலர்கள் மழையைக் காட்டாநிற்கும் ;

        இது கூத்துள் படுதல். மாயஞ்செய் வாளவுணர் என்றது உண்மை யுருவோடு எதிர்நின்று வெல்ல நினையாது, பாம்பு, தேள் முதலிய வஞ்ச உருக்கொடு வந்ததனால் என்க. இதனை, "காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள், மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்" என்பதனானுணர்க. இனி, அவரது இயற்கைத் தன்மை கூறியவாறு எனலும் அமையும். பகைவர் ஒழிந்த பின் வாள்வீரர் ஆடுங் கூத்தினை வாள் அமலை யென்பர் தொல்காப்பியர். 1"தானை யானை" என்னும் சூத்திரத்துப் "பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோராடும் அமலையும்" என்பது காண்க. இத் துறையினை 'ஒள்வாளமலை' என்பர் வெண்பாமாலையுடையார். கூத்து மலர் மாரியைக் காட்டும் என்றுமாம். போலும் - ஒப்பில் போலி. பின் இரு செய்யுட்களில் வருவனவும் இன்ன.


1. தொல், பொருள். 72.