2. வேட்டுவ வரி

12

உட்குடைச் சீறூரொருமகன்ஆ னிரைகொள்ள வுற்ற காலை
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க்
கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும் ;



12
உரை
12

        "உட்குடை............காட்டும் போலும்" உட்கு உடைச் சீறூர் ஒருமகன் ஆனிரை கொள்ள உற்ற காலை - பகைவர்க்கு அச்சம் விளைத்தலையுடைய சீறூரிடத்துள்ள ஒப்பற்ற வீரன் ஆனிரையைக் கொள்ளத் தொடங்கும்பொழுது, வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டும் போலும் - நிரை கவரும் போர்ப் பூவாகிய வெட்சி மலர் மாலையைத் தான் சூட வெள்ளிய வாளையுடைய கொற்றவையும் விரும்பும், வெட்சி மலர் புனைய வெள்வாள் உழத்தியும் வேண்டின் - வெட்சி மாலையைச் சூடக் கொற்றவை விரும்பின், வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரல் இசைத்துக் காட்டும் போலும் - பகைவர் ஊரைச் சூழ்ந்த காட்டிடத்துக் கரிக் குருவி தனது கொடிய குரலால் அவர்க்கு வரும் கேட்டினைக் கூறி உணர்த்தும் ;

        வெள்வாளுழத்தியும் வேண்டுமென்றது அவள் உடன் செல்வ ளென்றபடி. இச் செய்யுளும் அடுத்த செய்யுளும் நிரைகவர்தற்கண் 'கொற்றவை நிலை' கூறலின் வெட்சிப் புறனடை எனப்படும் ; என்னை? "1மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த, கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே" என்றாராகலான். இனி, வெண்பா மாலை இலக்கணம் நோக்கின் இவை வெட்சித்திணைக் கொற்றவை நிலையின்பாற் படும் ; என்னை? "2ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக், கூளி மலிபடைக் கொற்றவை - மீளி, அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார், முரண்முருங்கத் தான்முந் துறும்" என்றாராகலான்.


1. தொல், பொரு. 59. 2. புறப்பொ-வெ, 20.