"கள்விலை............செல்லும் போலும்" கள் விலையாட்டி மறுப்பப் பொறா மறவன்
கைவில் ஏந்தி - கள்ளினை விற்பாள் இவன் பழங்கடன் கொடாமையான் கள் கொடாது மறுக்க
அதனைப் பொறாத வீரன் கைக்கண் வில்லினைத் தாங்கி, புள்ளும் வழிப்படரப் புல்லார்
நிரை கருதிப் போகும் போலும் - பறவைகள் தன் பின்னே தொடர்ந்து வரப் பகைவரது ஆனிரையைக்
கொள்ளக் கருதிப் போவான், புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகும்
காலை - அங்ஙனம் போகுங்கால், கொள்ளுங் கொடி எடுத்துக் கொற்றவையும் கொடுமரம்
முன் செல்லும் போலும் - தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்துக் கொற்றவையும்
வில்லின் முன்னே செல்வாள் ;
புள் வழிப்படர்தல் அம் மறவன்
அழிக்கும் பகைவர் ஊனை உண்பதற்கென்க. இனி, 'புள்ளும் வழிப்படர' என்பதற்குப் புள்
நிமித்தம் தன் கருத்திற்கு ஒத்துச் செல்ல எனலும் பொருந்தும். கொடு மரம் முன்செல்லும்
என்றது வில் ஏந்திய அவ் வீரன்முன் செல்லும் என்றவாறு. இனி, கொடியையும் கொடுமரத்தையும்
எடுத்து அவ் வீரன்முன் செல்லும் எனினும் பொருந்தும். இது தன்னுறு தொழில்.
|