2. வேட்டுவ வரி



17

             வேறு

சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம்
அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது
மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே ;



17
உரை
17

        "சுடரொடு.........விலையே" சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் - ஞாயிற்றுடனே சுழன்று திரிதலைச் செய்யும் இருடிகளும் தேவர்களும் ஆகிய இவர்களுடைய, இடர்கெட அருளும் நின் இணை அடி தொழுதேம் - துன்பம் ஒழியும் வண்ணம் அருள் செய்கின்ற நினது இரண்டு திருவடிகளையும் வணங்கினேம் ; அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன்இது மிடறு உகு குருதிகொள் விறல் தரு விலையே - பகைவரை அடுதலையுடைய வலி மிக்க மறவர் நின் அடியினைத் தொட்டுச் சூளுற்ற வெற்றிக்கு விலையாகத் தரும் கடன் மிடற்றினின்றும் சிந்துகின்ற உதிரமாகும் இக் கடனை நீ கொள்வாயாக ;

        ஞாயிற்றின் வெம்மை உயிர்களை வருத்தா வண்ணம் அதனைத் தாம் ஏற்று இம் முனிவர் சுடரொடு திரிகின்றனர் என்க. இதனை, 1"நிலமிசை வாழ்நர் அமரல் தீரத், தெறுகதிர்க் கனலி வெம்மைதாங்கிக், காலுண வாகச் சுடரொடு கொட்கும், அவிர்சடை முனிவரும்" என்பதனானும், "2விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை" என்ற அடியின் விரிவுரையானும் உணர்க. விறல் தருவிலை - நீ தந்த வெற்றிக்கு விலையாகத் தரும் என்க. வேற்றுப்புலம் போகி நல்வெற்றங் கொடுத்துக், கழிபேராண்மைக் கடன் பார்த்திருப்பவளாகலான், விறல்தரு விலைக்கடன் கொள் என்றார் என்க. கடனாகும் குருதியாகிய இதனைக் கொள் எனலுமாம். எயினர் - தன்மையிற் படர்க்கை வந்த வழுவமைதி. பின்வருவனவும் இவ்வாறே கொள்க.


1. புறம். 42. 2 திருமுரு. 107.