3. புறஞ்சேரியிறுத்த காதை

5




10
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோற் றென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே


5
உரை
10

     ககோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா - எதிர்ப் பட்டதனைக் கொள்ளுதல் வல்ல கரடியும் வளைந்த புற்றினைத் தோண்டா, வாள் வரி வேங்கையும் மான்கணம் மறலா - ஒளி பொருந்திய கோடுகள் பொருந்திய புலியும் மானினத்தொடு மாறுபடா, அரவும் சூரும் இரைதேர் முதலையும் உருமும் - பாம்பும் சூர்த் தெய்வமும் இரை தேடித் திரியும் முதலையும் இடியும் ஆய இக் கொடியவை, சார்ந்தவர்க்கு உறுகண் செய்யா - தம்மை உற்றார்க்குத் துன்பம் செய்யா, செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என-செங்கோலையுடைய பாண்டியர் ஆளும் நாடென்று, எங்கணும் போகிய இசையோ பெரிதோ - எவ்விடங்களிலும் சென்ற புகழ் பெரிது ஆகலான்;

     பாம்பு உறைதலான் கொடிய புற்று எனலுமாம். கரடி தான் அகழ்தற்குரிய புற்றினையும் அகழா எனவும், புலி தாம் மாறுபடுதற்குரிய மானினத்தோடும் மாறுபடா எனவும் கூறின மையின் அவை மக்கட்கு ஊறு செய்யா என்பது தானே போதரும். அரவு முதலியன உறுகண் செய்யத் தகுவனவாயினும் செய்யா என்றார். இவ்வாற்றால் இவனது நாட்டு இக் காலத்து வருத்துவது இவ் வெயிலொன்றுமே என்பதாயிற்று. நாடு அகழா மறலா செய்யா என இடத்து நிகழ் பொருளின் றொழில்கள் இடத்தின்மேல் நின்றன.

[அடி. இவற்றான், இவனாணையும் ஐவகை நிலத்திற்குரிமையுங் கூறினார் ; ஐவகை நில னென்பது எவற்றாற் பெறுதுமெனின், கான மென்பதனால் முல்லையும், சூர் கரடி யென்பவற்றாற் குறிஞ்சியும், வேங்கை யென்பதனாற் பாலையும், உருமு வென்பதனால் மருதமும், முதலை என்பதனால் நெய்தலும் பெறுதும்.]

1''உருமு முரறா தரவுந் தப்பா, காட்டு மாவு முறுகண் செய்யா'' என்பதும் அறியற்பாலது.

1. பெரும்பாண். 42-3.