|
|
வரன்முறை
வந்த மூவகைத் தானத்துப்
பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
|
|
வரன்முறை
வந்த மூவகைத் தானத்து - நூல்களின் வரலாற்று முறைமையால் வந்த மூவகைத் தானத்தாலும்,
பாய்கலைப் பாவை பாடற் பாணி - பாய்ந்து செல்லும் கலை யூர்தியை யுடைய கொற்றவையின்
பாடலாகிய பண்ணை, ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டு - ஆசான் என்னும் பண்ணியலின்
நால்வகைச் சாதியாகிய திறங்களுடன் பொருந்துதல்வரச் செவிப் புலத்தானறிந்து ;
மூவகைத்தானம் - வலிவு மெலிவு சமன் என்னும்
மூவகை இயக்கிற்குரிய இடம் ; எழுத்து அசை சீர் என்பாருமுளர். பண், பண்ணியற் றிறம்,
திறம், திறத்திறம் எனப் பண்கள் நான்கு கூறுபடும் ; இவற்றுள் பண் என்பது ஏழு சுரமும்
அமையப் பெறுவது ; ஏனையன முறையே ஒவ்வொரு சுரம் குறைந்து வருவன ; இவற்றைக் குறிக்கும்
வடமொழிப் பெயர்கள் சம்பூரணம், சாடவம், ஒளடவம், சதுர்த்தம் என்பன. பண் முதலிய
நான்கும் பண், திறம் என இரண்டாகவும் அடக்கிக் கூறப்படும். பாலையாழ் என்னும் பெரும்
பண்ணின் திறம் அராகம், நேர்திறம், உறுப்பு, குறுங்கலி, ஆசான் என்னும் ஐந்துமாம்.
இவற்றுள் ஒவ்வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல். பெருகியல் என்னும் நால்வகைச் சாதிபற்றி
நந்நான்கு ஆகும். ஆசான் என்னுந் திறத்தின் அகநிலை காந்தாரமும், புறநிலை சிகண்டியும்,
அருகியல் தேசாக்கிரியும், பெருகியல் சுருதிகாந்தாரமும் ஆம் ; இறுதிக் கண்ணது சுத்த காந்தாரம்
எனவும் கூறப்படும். இவ் விராகங்களைச் செவியால் ஓர்த்தென்க.
|
|