|
|
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்
|
|
குருகும்
தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்- குருக்கத்தியும் செம்முல்லையும் வளவிய கொடியினையுடைய
முசுட்டையும், விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும் - விரிந்த பூக்களையுடைய மோசி மல்லிகையும்
வெள்ளை நறுந்தாளியும், குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் - வெட்பாலையும்
மூங்கிலும் கொழுவிய கொடியாகப் பொருந்திய சிவதையும், பிடவமும் மயிலையும் பிணங்கு அரில்
மணந்த - குட்டிப் பிடவமும் இருவாட்சியுமாய இவை பின்னிய பிணக்கத்துடன் கலக்கப் பெற்ற,
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்மிடைந்து சூழ்போகிய அகன்று ஏந்து அல்குல் - கோவையாகிய
மேகலை எவ்விடத்தும் செறிந்து சுற்றிய அகன்று உயர்ந்த கரையாகிய அல்குலினையும்;
வெதிரம் - அம் சாரியை. பகன்றை - சீந்திலுமாம்; பெருங்கையால்
என்றுமுரைப்பர். மயிலை - கொடிமல்லிகை யென்பாருமுளர். கொடுமை கூறினார் அல்குல் என்பதற்குப்
பொருந்த. விரிமலர், கொழுங்கொடி இவற்றை ஏற்புழிக் கூட்டுக.
பன்மலர் விரிந்து மணந்த மேகலைக்கோவை யாங்கணும் சூழ் போகிய
அகன்றேந்திய கொடுங்கரையாகிய அல்குல் எனக் கூட்டுக. கரையின் புறவாயெங்கும் குரவ முதலாகப்
பன்மலர் விரிந்தவை மீதுடுத்த பூந்துகிலாகவும், அகவாயெங்கும் குருகு முதலாகப் பிணங்கரில்
மணந்தவை மேகலையாகவும் உடைய கரையாகிய வல்குல் என்பர் அடியார்க்கு நல்லார். |
|