|
|
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை யென்ற பொய்யாக் குலக்கொடி
|
|
உலகு
புரந்து ஊட்டும் உயர் பேர் ஒழுக்கத்து - உலகினைப் பல பொருளையும் விளைத்து உண்பித்துக்
காக்கின்ற உயர்ந்த பெரிய ஒழுக்கத்தினையுடைய, புலவர் நாவில் பொருந் திய பூங்கொடி
- புலவர்களுடைய நாவின்கண் பொருந்திய திருமகளை ஒப்பாள், வையை என்ற பொய்யாக் குலக்கொடி
- வையை என்று சொல்லப்படுகின்ற பருவம் பொய்யாத பாண்டியர் குலக்கொடியாயுள்ளாள் ;
கொடுங்கரையாகிய அல்குலையும் வாலுகமாகிய முலையினையும் இதழாகிய
சிவந்த வாயினையும் கயலாகிய கண்ணினையும் அறலாகிய கூந்தலினையும் முல்லையாகிய நகையினையுமுடையாள்
பூங்கொடி குலக்கொடி என்க. ஒழுக்கத்துப் பொருந்திய பூங்கொடி என்க. புரந்து ஊட்டும் என்ற
எச்சங்களுள் விகுதி பிரித்துக் கூட்டுக. இரு பத்தாறு பரிபாட்டுக்களாலும் பிறவற்றானும்
சிறப்பிக்கப் பெற்ற மையின் புலவர் நாவிற் பொருந்திய என்றும், செல்வமளித்தலின்
பூங் கொடி என்றும், எஞ்ஞான்றும் பாண்டியர்க்குரியதாகலின் பொய் யாக் குலக்கொடி என்றும்
கூறினார்.
|
|