3. புறஞ்சேரியிறுத்த காதை


பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்



176
உரை
180

    பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பி யும் அருந்துறை இயக்கும் - அரிய துறையிலே செலுத்தும் குதிரைமுக ஓடமும் யானைமுக ஓடமும் சிங்கமுக ஓடமுமாகிய இவற்றினேறி, பெருந்துறை மருங்கின் பெயராது - பலரும் செல்லும் பெரிய துறைப்பக்கத்தே செல்லாது, ஆங்கண் மாத வத்தாட்டியொடு மரப்புணை போகி - அதற்கு அயலிலுள்ள சிறிய துறையில் கவுந்தியடிகளுடனே மரப்புணையில் சென்று, தே மலர் நறும்பொழில் தென்கரை எய்தி - தேன் பொருந்திய மலர்களையுடைய நல்ல சோலை நிறைந்த தெற்குக் கரையினை அடைந்து ;

    அருந்துறை - ஓடக்கோல் நிலைத்தலரிய துறை. ஓடத்தில் பல ரும் ஏறுவாராகலான் தாங்கள் மூவரும் தனியே கட்டுமரப் புணையில் சேர்ந்தனர் என்க; என்னை? முன்னர், "வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு" சாப முறுதலின். ;