3. புறஞ்சேரியிறுத்த காதை


20




25
தாரகைக் கோவையுஞ் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும்
தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்


19
உரை
29

     தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் - மீனொழுங்கு போன்ற முத்து வடமும் சந்தனக் குழம்பும், சீர் இள வன முலை சேராது ஒழியவும் - சீர்த்த இளமை பொருந்திய அழகிய முலைகளைச் சேரப் பெறாது நீங்கவும், தாது சேர் கழுநீர்த் தண் பூம் பிணையல் - பூம் பொடி பொருந்திய குளிர்ந்த குவளை மலர் மாலை, போது சேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும் - முல்லை மலர் சேர்ந்த பொலிவு பெற்ற கூந்தற்கண் சேராது நீங்கவும், பைந்தளிர் ஆரமொடு பல் பூங் குறு முறி - சந்தனத் தளிருடனே வேறுபல அழகிய சிறிய தளிர்கள், செந்தளிர் மேனி சேராது ஒழியவும் - சிவந்த மாந்தளிர் போலும் - மேனிக்கண் சேராது நீங்கவும், மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து புலவர் நாவில் பொருந்திய தென்றலொடு - பொதியத்தில் தோன்றி மதுரை நகர்க்கண் வளர்ந்து கல்வி யறிவாளர் நாவின்கண் பொருந்திய தென்றற் காற்றுடன், பால் நிலா வெண்கதிர் பாவைமேல் சொரிய - மிக வெள்ளிய நிலவின் கதிர்கள் நின்மீது சொரிய, வேனில் திங்களும் வேண்டுதி என்றே - பாவையே இவ்வேனிற் காலத்துத் திங்களினையும் வேண்டுகின்றனைபோலும் என்று, பார்மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் - நிலமகள் பெரு மூச்செறிந்து அடங்கிய பிறகு;

      போது - முல்லைப்பூ ; கற்பிற்கு அணிவது. ஆரத்தின் பைந்தளிர் என்க. "1வெள்ளிற் குறுமுறி" "2பொறிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி" என்பவாகலின் ' பல்பூங் குறுமுறி ' என்றார். மேனி - மார்பகம். தென்றலொடு ; வேறு வினையொடு, வேனில் - முதுவேனில். நின் கணவன் நின்னைப் பிரிந்த இளவேனிற் காலத்து ஒழியவும் ஒழியவும் ஒழியவும் விரும்பி இருந்த நீ இம் முது வேனிலில் சொரிதலையும் விரும்பி யிருப்பாய் போலும் என விரித்துரைத்தலுமாம். வேண்டுதியே என்று எனப் பிரித்துக் கூட்டி ஏகாரத்தை எதிர்மறையாக்குக. கண்ணகிக்குக் கலவியின்மையின் இங்ஙனம் கூறினார். அடங்குதல் - துயிலுதல் ; உயிர்கள் துயிலுதலைப் பார்மகள் துயிலுதலாகக் கூறினார். இனி, இவை இவ்வாறொழியவும் வேனிற்றிங்களும் வெண்கதிரைச் சொரிதற்கு விரும்புவதாயிற்றோ என்று அயாவுயிர்த்து என்னலுமாம்.

1. திருமுரு. 37. 2. நற்றிணை. 9.