3. புறஞ்சேரியிறுத்த காதை


185

கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந்தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி



184
உரை
189

        கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் - கரிய நெடிய குவளையும் அல்லியும் தாமரையும், தையலும் கணவனும் தனித்து உறுதுயரம் - கண்ணகியும் அவள் கணவன் கோவல னும் பிரிந்து அடையும் துன்பத்தினை, ஐயம் இன்றி அறிந்தன போல - ஐயப்பாடு சிறிதும் இன்றி உணர்ந்தன போல, பண்நீர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கி - வண்டுகள் பாடும் பண்ணீர் மையால் வருந்தி ஏக்கமுற்று அழுது, கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க - கண்ணீரைக்கொண்டு கால் பொருந்த நடுங்க ;

        குவளை முதலியவற்றில் வண்டுகள் ஒலித்தல் இவர்க்குறு துயரங் கண்டு அக் குவளை முதலியன அழுதல்போன்றிருந்தன என்க. கண்ணீர் - கண்ணின்நீர், கள்ளாகிய நீர் எனவும், கால் உற நடுங்க - கால்கள் மிக நடுங்க, காற்றால் மிக அசைய எனவும் இரு பொருள் படுமாறறிக.