4. ஊர்காண் காதை




20

நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி
நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த
அறியாத் தேயத் தாரிடை யுழந்து
சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான



17
உரை
20

       நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி - நல்லொழுக்க நெறியினின்றும் பிறழ்ந்தோரது தன்மையை உடையேனாய், நறுமலர் மேனி நடுங்கு துயர் எய்த - நறிய மலர்போலும் மேனியையுடைய இவள் நடுங்குதற்குக் காரணமாய துயரத்தினை அடைய, அறியாத் தேயத்து ஆர் இடை உழந்து - முன்னம் உணராத நாட்டின்கண் அரிய வழியிடத்து அலைந்து வருந்தி, சிறுமை உற்றேன் செய்தவத்தீர் யான் - செய்த தவத் தினையுடையீர் யான் இழிவுற்றேன் ;

       
இல்லற நெறியினீங்கிக் கணிகையர் வாழ்க்கையொடு பொருந் தினமையானும், விழுக்குடிப் பிறந்தும் தன் கற்புடை மனைவியோடு நீணெறிச் சென்றமையானும் "நெறியி னீங்கியோர் நீர்மையே னாகி ............சிறுமை யுற்றேன்" என்றான் என்க. நறுமலர் மேனி - ஆகுபெயர். செய்தவத்தீர் யான் நீர்மையேனாகி ஆரிடை யுழந்து சிறுமையுற்றேன் என மாறுக.