|
|
தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்
கென்னிலை யுணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்
ஏத முண்டோ அடிகளீங் கென்றலும
|
|
தொல்
நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு - பழமையான இந் நகரத்திடத்துள்ள வணிக மாக்களுக்கு,
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் - எனது நிலைமையை அறிவித்து யான் வருந்துணையும்,
பாதக் காப்பினள் பைந்தொடியாகலின் ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் - அடிகாள்
இப் பசிய தொடியினையுடையாள் நும் திருவடிகளாகிய காவலை யுடையாளாகலான் இவ்விடத்து இவளுக்கு
ஓர் தீங்கு உண்டாமோ என்று கூறலும் ;
மன்னர் பின்னோர் - நாற்பாலுள்ளே
மன்னர்க்குப் பின்னாக வுள்ளோர் ; வணிகர். என்னிலை என்றது முன்பு தானிருந்த நிலைமையும்
இப்போது அடைந்த நிலைமையும் என்க. பாதக்காப்பு - பாதமாகிய காப்பு. பைந்தொடி - அன்மொழித்தொகை.
முன்னர், "1அடிக ணீரே யருளிதி
ராயினித், தொடிவளைத் தோளி துயர்தீர்த்தேன்" என இவன் கூறியது பெரியோரைச் சார்ந்தோர்க்கு
யாதும் தீங்கு நேராதென்பதனை உட்கொண்டதாகலான், ஈண்டும் அக்கொள்கையை உட்கொண்டே
ஏதம் உண்டோ' என்றான் என்க. |
1
சிலப், 10 : 62.3.
|
|